டி.ராஜேந்தருக்கு நடிகர் விஷால் கண்டனம்.

எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கிய விழித்திரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. நடிகர்கள் கிருஷ்ணா, விதார்த் மற்றும் நடிகை தன்ஷிகா உள்பட படக்குழுவினருடன் இயக்குனர் டி.ராஜேந்தர் அவர்களும் அதில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் நடிகை தன்ஷிகா தன் பெயரை சொல்லாததை கண்டித்து அவரை தொடர்ந்து விமர்சித்துள்ளார். இதனால் வேதனையடைந்த தன்ஷிகா மேடையிலேயே கண்கலங்கினார். மூத்த கலைஞரான டி.ராஜேந்தரின் செயலுக்கு திரை பிரபலங்கள் பலரும் வன்மையான கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நடிகர்  சங்கத் தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,

“ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர்  டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டி.ஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர்.  அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு… சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கைதட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்.”

என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*