தொட்ரா திரைவிமர்சனம்!

கிருஷ்ணகிரியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருபவர் ‘ஓரு ஊருல ஒரு நல்ல பையன்’ சங்கர் (பிருத்வி). தகப்பன் இல்லாத குறையை போக்க காலையில் பேப்பர் போட்டு, பின்னர் கல்லூரிக்கு சென்று தானும் படித்து, தங்கையையும் படிக்க வைக்கும் பொறுப்பான பையான வாழ்கிறார். உயர் சாதி பணக்கார வீட்டு பெண் திவ்யா (வீணா). சாதி வெறிப்பிடித்த, சமூதாய காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அப்பாவுக்கும், அண்ணனுக்கும் செல்லப்பிள்ளை. . சங்கருக்கு திவ்யா மீது காதல் மலர்கிறது. திவ்யாவும் சங்கரை காதலிக்கிறார். இந்த விஷயம் திவ்யா குடும்பத்துக்கு தெரிந்து காதல் ஜோடியை பிரிக்கிறார்கள். திவ்யாவுக்கு வேறு ஒரு பையனுடன் திருமண நிச்சயம் செய்கிறார்கள்.

இதனிடையே பழனியில் வசித்து வரும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஊரில் உள்ள வயசு பையன்களுக்கு எல்லாம் செலவுக்கு காசு கொடுத்து, பெரிய இடத்து பெண்களை காதலிக்க பணிக்கிறார். திவ்யா – சங்கர் காதல் என்ன ஆனது, வெங்கடேஷின் உள்நோக்கம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்த கதையை படித்த உடனே புரிந்திருக்கும், ஆணவக்கொலைக்கு பலியான திவ்யா – இளவரசன், கௌசல்யா – சங்கர் காதல் கதை தான் இந்த படம் என்று. படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பாத்திரங்களுக்கு நிஜவாழ்க்கையில் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயரையே வைத்திருக்கிறார் இயக்குனர் மதுராஜ்.

உடுமலைப்பேட்டை கௌசல்யா- சங்கர் காதல் சம்பவத்தை ஞாபகப்படுத்தும் விதமாக நாயகன் பிருத்வியின் பாத்திரத்திற்கு சங்கர் பெயரையே சூட்டியிருக்கிறார். ஏதாவது ஒரு பிரேக் கிடைத்துவிடாத என காத்திருக்கும் பிருத்வி, அதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார். நல்ல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பு, நடனம் என தன் பங்கை சிறப்பாக அளித்திருக்கிறார்.

திவ்யாவாக வரும் அறிமுக நாயகி வீணா, அந்த பாத்திரத்தில் யதார்த்தமாக பொருந்துகிறார். எந்த சலனமும் இல்லாமல் அண்ணன், அண்ணியிடம் வாக்குறுதி அளித்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் காட்சியில் சர்ப்ரைஸ் தருகிறார். பொண்ணுக்கு பிரைட் பியூட்சர் இருக்கும்னு நம்பலாம்.

இருவர்கள் இருவரைவிட நாயகின் அண்ணன் புவன்ராஜ்ஜாக நடித்துள்ள எம்.எஸ்.குமார் தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார். சமுதாய காவலனாக, தங்கை மீது அதீத பாசம் கொண்ட அண்ணனாக அசர வைக்கிறார். அவரது தம்பியாக நடித்துள்ள ராஜேஷ், உண்மையிலேயே அவரது சொந்த தம்பி என்பது கூடுதல் தகவல். வெல்கம் பிரதர்ஸ்.

காமெடியனா இல்லை வில்லனா என குழம்பும் கதாபாத்திரத்தில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். பல காட்சிகளில் சிறப்பாக செய்திருந்தாலும், க்ளாமிக்சில் ஓவர் ஆக்டிங் செய்து ஒட்டாமல் போகிறார். அண்ணி மைனா சூசன், அப்பா, தங்கை, அம்மா, நண்பர்கள் என மற்ற கேரக்டர்களில் நடித்துள்ளவர்கள் அவர்களது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஆணவக்கொலை தான் கதைக்களம் என முடிவு செய்துவிட்டு, நிஜ சம்பவங்களை கற்பனையாக தொகுத்து வழங்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மதுராஜ். உடுமலை சங்கர் கொலை சம்பத்தின் சிசிடிவி புட்ஜேஜில் இருந்து தான் படம் தொடங்குகிறது. அதுவே எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது. ஆனால் அடுத்தடுத்தக் காட்சிகிள், இது வழக்கமான சினிமா என உணர்த்திவிடுவதால் அட போங்க பாஸ் என புலம்ப வைக்கிறது. சதத்துவபுரம், கறுப்புச்சட்டை நண்பன் என குறியீடுகளின் மூலம் பல விஷயங்களை பார்வையாளர்களுக்கு கடத்த முயன்றிருக்கிறார் இயக்குனர்.

திவ்யா, சங்கர், யுவராஜை நினைவுப்படுத்தும் புவன்ராஜ் என எல்லா கேரக்டர்களுக்கும் நிஜ மனிதர்களுடன் ஒத்துப்போகும்படியாக பெயர் வைத்த இயக்குனர், ஏ.வெங்கடேஷ் பாத்திரத்திற்கு மட்டும் எந்த பெயரும் வைக்காமல் விட்டது ஏன் என தெரியவில்லை. அதேபோல அந்த கேரக்டரை கொடூரமாக காண்பிக்க வேண்டும் என நினைத்து வைக்கப்பட்டக் காட்சிகள், திணிக்கப்பட்ட உணர்வை தருகிறது. அந்த காட்சியின் நீளமும் அதிகம்.

படத்தில் ஏகப்பட்ட லாஜில் ஓட்டைகள். பிருத்வி கேரக்டரை நல்ல வலுவானதாக அமைத்திருக்கலாம். ஆர்.என்.உத்தமராஜாவின் இசையில், பக்கு பக்கு பாடல் தாளம் போட வைக்கிறது. அதேபோல், அடி உனக்குள்ள ஒளிச்சு பாடல் மனதுக்கு இதம். நவீன் சங்கரின் பின்னணி இசை பழைய படங்களை நினைவுப்படுத்துகின்றன. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு, ராஜேஷ் கண்ணாவின் எடிட்டிங் என தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

தொட்ரா… படத்துக்கு ஏன் இந்த தலைப்பு வைத்தார்கள் என்பது இறுதி வரை புரியவில்லை. முடிஞ்சா தொட்டு பாருடா என எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதா இல்லை ‘வந்து தொடுங்க’ எனும் தொனியில் அழைப்பாக எடுத்துக்கொள்வதா என குழப்பமாக இருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை ஒழுங்காக சொல்லியிருந்தால், நாமும் தொடத் தயங்கியிருப்போம்.

6.2

Fair

Story - 7
Screenplay - 7
Direction - 6
Artist - 7
Music - 7
Cinematography - 7
Editing - 7
Stunt - 6
Dance - 7
Art - 7
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*