ராட்சசன் விமர்சனம்

அக்சஸ் பிலிம்பேக்டரி தயாரிப்பில், “முண்டாசு பட்டி” ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – அமலாபால் ஜோடியுடன் முனிஸ்காந்த் ராமதாஸ், ராதாரவி, நிழல்கள் ரவி, காளி வெங்கட், கஜராஜ் வினோதினி, சூசன் ஜார்ஜ், மோனிகா, ப்ரியா, த்ரிஷாலா, தங்கம்… ஆகியோர் நடிப்பில் ‘சைக்கோ கில்லருக்கும், ஈகோ போலீசுக்கும்’ இடையே நடக்கும் யுத்தமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் “ராட்சசன்.”

கதைப்படி, சினிமா உதவி இயக்குநராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு தீவிர முயற்சி செய்கிறார். சைக்கோ த்ரில்லர் கதையொன்றை இயக்க நினைத்து அதற்கான ரிசர்ச்சில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணு விஷால். தனது கதைக்காக பல்வேறு த்ரில்லிங் தகவல்களை சேகரிக்கிறார். பின்னர் தயாரிப்பாளர்களை சந்தித்து பவுண்டட் ஸ்கிரிப்டுடன் வாய்ப்புத் தேடி வருகிறார். ஆனால் இவரது முயற்சி, எங்கு பார்த்தாலும் ஏமாற்றத்தையே தருகிறது!

இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஷ்ணுவின் மாமாவான ராமதாஸ், விஷ்ணு விஷாலை இறந்து போன விஷ்ணுவின் போலீஸ் தந்தையின் வாரிசு எனும் அடிப்படையில ்போலீஸ் வேலையில் சேர சொல்லி வற்புறுத்துகிறார்.

முனிஸ் – ராமதாஸின் உதவியுடன் போலீஸ் அதிகாரியாகும் விஷ்ணு விஷால் பதவியேற்ற சில நாளில், பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்படுகிறார்.

இதுகுறித்த விசாரணையில் இறங்கும் விஷ்ணு விஷாலுக்கு, அடுத்தடுத்து நடக்கும் கொடூர கொலைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இருப்பினும் அந்த கொலையில் இருக்கும் மர்மங்களை களைந்து பல தடங்களை சேகரிக்கிறார். இதற்கிடையே பள்ளி ஆசிரியையான அமலா பாலுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் அமலா பால் வகுப்பில் படிக்கும் விஷ்ணு விஷாலின் அக்கா மகளும் கடத்தப்படுகிறார்.

ஒருவழியாக சைக்கோ கொலையாளியை நெருங்கும் விஷ்ணு விஷாலால், அந்த கொலைகாரனை பிடிக்க முடியவில்லை. மேலும் பணியில் இருந்தும் விஷ்ணு ஈகோ பிடித்த பெண் போலீஸ் அதிகாரியால் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

கடைசியில், பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூர கொலைகளை செய்யும் ராட்சசனை விஷ்ணு விஷால் கண்டுபிடித்தாரா? தனது அக்கா மகளையாவது உயிருடன் மீட்டாரா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்க முயன்றிருக்கிறது “ராட்சசன்”. படத்தின் மீதிக்கதையும் களமும்!

படத்தின் கதை நாயகராக விஷ்ணு விஷாலே, படத்தை தனது தோள் மீது சுமந்து செல்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்திற்காக விஷ்ணு கடுமையாக உழைத்திருக்கிறார்… என்பதை ஒவ்வொரு பிரேமிலும் பார்க்கமுடிகிறது.

அமலாபாலுக்கு பெரிய ரோல் இல்லை… என்றாலும், அடக்க ஒடுக்கமான டீச்சராக வசீகரிக்கிறார்.

காமெடி தோற்றத்தில் நடித்து வந்த முனிஸ்காந்த் – ராமதாஸ் இந்த முறை விறைப்பான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் வந்து முறைப்பாக வேலை செய்திருக்கிறார். காளி வெங்கட், சக போலீஸாக கதாநாயகனுக்கு உதவுகிறார். அவ்வளவே!

ராதாரவி, நிழல்கள் ரவி, சங்கிலி முருகன், சூசன் ஜார்ஜ், வினோதினி உள்ளிட்டோர் தங்கள் பாத்திரமறிந்து அனுபவித்து நடித்துள்ளனர்.

கோபி ஆனந்தின் அழகிய கலை இயக்கம், மிரட்டல். ஷான்லோகேஷின முன் பாதி படத்தொகுப்பு ப்ளஸ், பின் பாதி படத்தொகுப்பு மைனஸ்.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சைக்கோ த்ரில்லர் படத்திற்கு உரிய நேர்த்தியுடன் சிறப்பாக வந்துள்ளன… என்பது ஆறுதல்!இசைஞர் ஜிப்ரான். பொம்மை இருக்கும் கிப்ட் பாக்ஸை காட்டும் போது வரும் பின்னணி இசையின் மூலமே ஒருவித பயத்தை உண்டுபண்ணியிருக்கிறார்… என்பதும், வில்லன் யார்? அவன் எப்படி இருப்பான்..? என்பதை ஒரு குறிப்பிட்ட சீன்கள் வரை துளியும் இயக்குனர் காட்டாவிட்டாலும், இசையாலேயே அந்த ராட்சசனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்… என்பதும் இப்படத்தின் பெரும் பலம் ஆகும்.சில வருடங்களுக்கு முன் “முண்டாசுப்பட்டி” என்ற முழு நீள காமெடிப் படத்தை கொடுத்துவிட்டு, அதில் இடம் பிடித்த அதிகப்படியான நட்சத்திரங்களை வைத்து, தனது அடுத்த படைப்பில் முழு நீள சைக்கோ த்ரில்லர் கதையை முயற்சித்திருக்கும் இயக்குநர் ராம்குமாருக்கு ரொம்பவே துணிச்சல்! அதற்காக அவரை பாராட்டலாம்.படத்தின் முதல் பாதி போவதே தெரியாத வகையில் நகர்கிறது. இரண்டாவது பாதியில் சில காட்சிகளை குறைத்திருந்தால், இந்தப்படம் மேலும் சிறப்பாக வந்திருக்கும்… என்பது நம் எண்ணம் மட்டுமல்ல… திண்ணமும் கூட!

அதிலும், குறிப்பாக கிளை மாக்ஸ் காட்சியில் வில்லனை நெருங்கிய பிறகும் அந்த அகோர முக வில்லனுடன் அக்காட்சிகள் நீள்வதும், திரும்ப திரும்ப அந்த கிப்ட் பாக்ஸ் பொம்மைகள் காட்டப்படுவதும், இளம் மாணவிகளின் கொடூர கொலை செய்யப்பட்ட பொட்டலங்கள் காட்டப்படுவதும் பெரும் போர் அடிக்கிறது.

படத்தில் சைக்கோ கொலையாளியின் கொடூரமான முகத்தையும், தோற்றத்தையும் ஒரு கட்டத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை… என்பது பலவீனம். போலீஸ் ஹீரோவால், தன் அக்கா – மாமாவின் மகளைக் கூட காப்பாற்ற முடியாதது மேலும் பலவீனம்.

ஆக மொத்தத்தில், “ராட்சசன்’ – சைக்கோ, த்ரில்லர், சஸ்பென்ஸ்.. பிரியர்களால் ‘ரசிக்கப்படுவான்!”

Rating: 3.75/5

6.5

Fair

Story - 8
Screenplay - 7
Direction - 7
Artist - 7
Music - 7
Cinematography - 7
Editing - 8
Stunt - 7
Dance - 7
Art - 7
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*