MAESTRO ILAYARAAJA SPEECH IN ENULLIL ULLE MSV SHOW

MAESTRO ILAYARAAJA SPEECH IN ENULLIL ULLE MSV SHOW

msv 1 msv5

கம்யூட்டரை தூக்கிப் போடுங்கள் ;மூளையைப் பயன்படுத்துங்கள் : இளம் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா அறிவுரை
கையிலுள்ள கம்யூட்டரை தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள். என்று இளம் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா அறிவுரை கூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு ;
மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதன் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் விதமாக இசைஞானி இளையராஜா ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி. ‘என்கிற பிரமாண்ட லைவ் இசை நிகழ்ச்சியை நேற்று மாலை சென்னை காமராஜர். அரங்கத்தில் நடத்தினார்.
நிகழ்ச்சியின் அறிமுகவுரையில்  இளையராஜாவை வரவேற்று வழிவிட்டு விடைபெற்றார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
நிகழ்ச்சியின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக முதலில் ஒலித்தது’நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் .msv3
இளையராஜா பேசத் தொடங்கியதும் திருவாசகப் பாடலை பாடினார்.இசைநிகழ்ச்சி தொடங்கியதும் இளையராஜா முதலில் எம்.எஸ்.வி பற்றி சற்று ஆதங்கத்துடன்தான் ஆரம்பித்தார்.
“எம்.எஸ்.வி அண்ணா உலகமகா இசையமைப்பாளர்தான் ,உலகப்புகழ் பெற்ற எந்த  இசையமைப்பாளருக்கும் அவர் குறைந்தவரல்ல. தமிழ்நாட்டிலே பிறந்ததால் எம்.எஸ்.வி அண்ணா உலக மகா மேதையில் சேரமாட்டாரா? பாரதி சொன்ன மாதிரி நெருப்பில் சிறியது என்ன பெரியது என்ன? தழலில் சிறிது என்ன பெரிது என்ன? தமிழ்நாட்டு நெருப்பு உலகை எரிக்காதா? அக்கினிக் குஞ்சு அளவில் சிறிதானாலும் எரிக்கும்.
அவர் என் இளமைப் பருவத்தை ஆட்கொண்டதை என்னுள் புகுந்து நிறைந்து என்னைப் பாதித்ததையே இங்கே. பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.”
என்றவர் தன் நினைவலைகளில் அரங்கத்தை மூழ்கவிட்டார்.
தொடர்ந்து  பல  பாடல்களுடன் எம்.எஸ்.வி பற்றிய.நினைவுகளுக்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்றார்.msv 2
“எம்.எஸ்.வி அவர்கள்,  இசையமைப்பாளர் சிஆர் சுப்பராமனின் சீடர்..எம்.எஸ்.வி,தன் குருவை உயிரைப் போல் மதித்தவர் .  ‘தேவதாஸ்’ படத்திற்கு இசையமைத்த போது சுப்பராமன் மறைந்து விட்டார். இரண்டு பாடல்கள் முடியவில்லை. எம்.எஸ்.வி தான் பாடல்கள் இசையமைத்து பின்னணி இசையமைத்தும் முடித்துக் கொடுத்தார் சுப்பராமனை எனக்கும் தெரியும் அது ஒரு பாரம்பரியம் போல எனக்குள்ளும் அவர் இசை இருக்கிறது.
எனக்கு இசை கற்றுக் கொடுத்த மாஸ்டர் தன்ராஜ் சினிமா இசையமைப்பாளர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்வார்.  சினிமா இசையமைப்பாளர்களுக்கு இசைபற்றிய நணுக்கங்கள், தொழில்நுட்பங்கள் தெரியாது என்பார். நானும் அப்படிப்பட்ட கருத்தையே கொண்டிருந்தேன் எம்.எஸ்.வியை சந்திக்கும் வரை. அவர் இசையமைத்த வேகம்,அவரது  ஞானம் ,துல்லியம் இவற்றை நேரில் பார்த்தபின் என் அபிப்ராயம் எல்லாம் உடைந்து நொறுங்கியது.
ஒரு முறை ‘சண்டிராணி’ படப் பாடலை யாரோ இசையமைத்ததாக நினைத்து அவரிடம் பேசினேன் அவர் அது தான்தான் என்றதும் எனக்கு அதிர்ச்சி. ஏன் நம்பமாட்டாயா என்றார். அன்று அவர்மீது ஏற்பட்ட பிரமிப்பு பிறகு கடைசி வரை குறையவே இல்லை.msv6
அவரது பாடல்களில் எல்லாமும் இருக்கும். ஒரு பாடலில் ‘மறைந்தது சிலகாலம், தெளிவும் அறியாது ,முடிவும் புரியாது மயங்குது எதிர்காலம் ‘என்று கவலைப்பட வைத்தார் அடுத்த பாடலில் ‘மயக்கமா கலக்கமா’ என நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்தார்.
அவரது ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடலைக் கீர்த்தனைக்கு ஒப்பானது என்றார் பால முரளி கிருஷ்ணா.
நானும் அண்ணன் பாவலரும் சினிமாவுக்கு வரும்முன் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடியபோது பாடியவை எல்லாமே அண்ணனின் மெட்டுகள்தான் ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ பாடலை ‘சுப்ரமணியம் சோறு வேணும்’ என்று சி. சுப்ரமணியத்தைப் பார்த்து கேட்டோம் இப்படிப் பல பாடல்கள்
கஜல் பாடலாக முதலில்அண்ணன் எம்.எஸ்.வி தந்தது ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல்தான்.
சங்கீதத்துக்கு நான் பொறுப்பு சாகித்யத்துக்கு நீங்கள் பொறுப்பு என்று கவிஞர்களிடம் கூறுபவர்.
200 ஆண்டுகளுக்கு முன்பு மொசார்ட் அமைத்த இசை இவரிடம் இருந்தது . மொசார்ட்இசையை கேட்க வாய்ப்பே இல்லை இவருக்கு. இருந்தாலும் மொசார்ட் அமைத்த உலகத்தர இசை இவரிடம் இருந்திருக்கிறது
அப்படிப்பட்ட எம்.எஸ்.வியை உடுமலை நாராயணகவி ஒரு முறை அறைந்து விட்டார். ‘உலகேமாயம்’ பாடலை கண்டசாலா ‘உல்கே மாயம்’ என பாடியதற்காக அறைந்து விட்டார்.
அவர் பிடித்து விட்டது என்றால் மனதை திறந்து பாராட்டுவார். குழந்தை மனசு அவருக்கு .எம்.எஸ்.விஅண்ணா என்னை முதலில் பாராட்டியது ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலுக்குத்தான்
அப்போதெல்லாம் என் பட பாடல்பதிவும் அவர் பட பாடல்பதிவும் அடுத்தடுத்து கூட இருக்கும். அவர் வந்தால் எனக்கு பதற்றமாகிவிடும் ‘தண்ணிகருத்திருச்சு ‘பாடலை  ஜிகே வெங்கடேஷ் மாற்றி மாற்றிப் பாடினார். 62 டேக் எடுத்தேன்.எம்.எஸ்.வி என்னைப் பாடிக் காட்டச் சொன்னார். எனக்கு மேலும் பதற்றம்.ஏதோ மிஸ் ஆகி பல டேக் எடுத்தேன்.
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ என்ன ஓர் அற்புதமான பாடல் அப்படி எல்லாம் இன்று போடமுடியுமா? இப்போது போட்டால் எழுந்து போய் விடுவார்கள். சூப்பர் ஸ்டார் நடித்தாலும் இப்போது எழுந்து போய் விடுவார்கள். ஏனென்றால் அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வேறாக இருக்கிறது,. ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாட்டு போல இப்போது இல்லை என்பது திட்டவட்ட முடிவு இனியும் இருக்கப் போவதில்லை .இப்போதெல்லாம் சிப்ஸ், பாப்கார்ன்கள்  வந்துவிட்டன.
இப்போதுள்ளவர்களுக்குச் சொல்கிறேன் இன்று இசை கேவலமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
கையில் சாம்பிள் வைத்துக் கொண்டு இசையமைத்து வருகிறார்கள். சாம்பிளை எல்லாம் தூக்கி போடுங்கள் கையிலுள்ள கம்யூட்டரை தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள். கம்யூட்டரைப் பயன்படுத்தாதீர்கள்.மூளையைப் பயன்படுத்துங்கள். கம்யூட்டர் சிப்பை விட்டுவிட்டு மூளையிலுள்ள சிப்பை பயன்படுத்துங்கள்.
எம்.எஸ்.வி அண்ணாவை விட்டுவிட்டு எனக்கு ஸ்ரீதர் பட வாய்ப்பு வந்த போது நான் அதை மறுத்தேன்.பாரதிராஜா கூட பெரிய வாய்ப்பு ஏன் மறுக்கிறாய் என்றார்  58 படங்கள் இசையமைத்த எம்.எஸ்.வி அண்ணாவையே  அவர் தூக்கிப் போட்டு விட்டார்   என்று நான் என்று மறுத்தேன்.
அப்படிப்பட்ட எம்.எஸ்.வி. என்னைப் பாதித்த உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினேன். அந்த உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடாது. என்றுதான் நான் யாரையும் கூப்பிடவில்லை. அவருக்கு மறைவு என்பதே இல்லை  அவர் என்றும் நம்முடன் இருப்பார். இன்றும் எம்.எஸ்.வி அண்ணா நம்முடன் இருக்கிறார்.” என்று நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.
கடைசியாக  ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?. சாட்சி சொல்லும் சந்திரனே நீபோய் தூதுசொல்ல மாட்டாயோ?’ என்ற பாடலுடன் முடித்தது எம்.எஸ்.விக்கு  இளையராஜா மானசீகமாக தன் உணர்வைக்  கூறுவதைப் போலவே இருந்தது.
எம்.எஸ்.வியின் நினைவாகப் பாடல்களுடன்  இளையராஜா தன்வாழ்க்கையையும் புரட்டிக் காட்டியது ரசிகர்களுக்கு இசை விருந்தாகவும் கருத்து அனுபவமாகவும் இருந்தது.
இளையராஜா மற்றும் ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி’.விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
விழா நிறைவில்  வசூலான தொகையை ரஜினி முன்னிலையில் எம்.எஸ்.வி குடும்பத்தினருக்கு இளையராஜா வழங்கினார். அதற்கு எம்.எஸ்.வி யின் மகள் நெகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.
இந்த இசை நிகழ்ச்சியில் கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து வண்ணப்பட காலம் வரை சுமார் 30 பாடல்கள் பாடப்பட்டன  .அவைசார்ந்த இளையராஜாவின் அனுபவங்களும் பார்வையாளர்களால்  ரசிக்கப் பட்டன.
நிகழ்ச்சியில் நடிகர்கள்   சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விவேக்,பார்த்திபன்,மோகன்ராம், பஞ்சு சுப்பு  இசையமைப்பாளர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர்ராஜா,ஸ்ரீகாந்த் தேவா, ஜேம்ஸ்வசந்தன், பாடகி பவதாரணி,ஏராளமான பாடகர்கள் இசைக்கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*