தேவை ஆசையாக மாறும்போது ஏற்படக்கூடிய விளைவுகளை விளக்கும் படம் போத.

வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலை விஷயமாக வந்திருக்கும் கார்த்தி (மிப்பு), மணிகண்டன் (விக்கி) ஆகிய இரு நண்பர்கள் மாத்தாயி (ராகுல் தாத்தா)என்ற வயதான நபரின் அறையில் தங்குகிறார்கள். கார்த்தி செல்போன் சர்வீஸ் கடை வைத்திருக்கிறான். மற்றொருவனான மணிகண்டன் சினிமாவில் நடிக்கமுயற்சி செய்துகொண்டிருக்கிறான்.

 

நண்பர் ஒருவரின் குறும்படம் வெற்றியடைந்ததை அடுத்து அவர்களோடு பார்ட்டிக்குச் செல்கிறான் மணி. பப்பில் ஒரு பெண் மணியை பார்த்து அவனோடுபடுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கால் பாய் ஏஜன்சி நடத்தும் நபரிடம் விருப்பம் தெரிவிக்கிறாள். அவனும் மணியிடம் பணத்தாசை காட்டி அதில் அவனை ஈடுபடுத்துகிறான். பிறகு பணத் தேவைக்காக இதுவே பழக்கமாகி, இந்தத் தொழிலைத் தொடர்கிறான் மணி.

செல்போன் சர்வீஸ் கடை வைத்திருக்கும் கார்த்திக்குக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் ரகசியங்களைத் திருடுவது,அதில் இருக்கும் சுவராஸ்யமான தகவல்களைத் தனது நண்பர்களுடன் பகிர்வதுகொள்வது. ஒரு வாடிக்கையாளரிடம் வீடியோ ஏதும் இல்லை. ஆனால்,அவரிடம் இருக்கும் கால் ரெக்கார்டரைக் கேட்கும்போது 2 கோடி ரூபாய் பணம் அவர் வீட்டில் இருப்பதாகத் தெரிகிறது. அதை எடுக்க முயற்சி செய்யும்போது,தனது நண்பன் மணி அந்த வீட்டுக்குள் செல்வதை பார்த்து அதிர்ச்சி ஆகிறான்.

பிறகு மணி என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறிந்த கார்த்தி, அதைப் பயன்படுத்தி மணியின் மூலம் பணத்தை எடுக்கத் திட்டம் தீட்டுகிறான். மணியும்அதற்கு ஒப்புக்கொண்டு போகும்போது, வீட்டில் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். அந்தக் கொலைக்குக் காரணம் யார், பணத்தை யார் எடுத்தார்கள் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.

திரைப்படம் எடுத்து அதைத் திரையில் வெளியிடுவதே குதிரைக் கொம்பாக இருக்கும் இச்சூழலில், குறைந்த அளவு பட்ஜட்டில் முகம் தெரியாத நடிகர்களைப்பயன்படுத்தி, தான் என்ன சொல்லவந்தோமோ அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர். நாயகன் கால் பாயாகப் பல பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொள்வதாகக் கதை இருந்தாலும் எந்த ஆபாசமும் இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பணத்தாசைதான் இங்கு உண்மையான ஆபாசம் என்பதை உணர்த்தும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவனது தேவைக்கு மேல், பேர், பணம், புகழ் என்ற போதை வந்தால் அது அத்தனையும் ஆபத்து என்பதைச் சித்தரிக்கிறது படம். ஒருவனது லட்சியம்நேர்வழியில் இருந்தால் அது நிச்சயம் வெற்றியடையும், குறுக்கு வழியாக இருக்கும்போது என்ன மாதிரியான சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டும்என்பதை அறிவுரையாகக் கூறாமல் யதார்த்தமாக நகைச்சுவை உணர்வோடு கூறியிருக்கிறார் இயக்குநர். பணத்தை எடுத்தவன் யார் என்பதைப் பலதிருப்பங்களோடு யாராலும் கணிக்க முடியாத அளவிற்குக் காட்சிப்படுத்தியிருப்பது அருமை.

படத்தில் உள்ள எல்லாக் கதாபாத்திரங்களையும் முக்கியமான கதாபாத்திரங்களாகப் படைத்திருக்கிறார் இயக்குநர். அறிமுக நடிகர்கள் சிலர் தங்கள் பங்கைஇன்னும் நன்றாகச் செய்திருந்திருக்கலாம். விக்கி, மிப்பு, ராகுல் தாத்தா , வினோத் முரளி, உதய பானு ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களோடு பொருந்திப்போகிறார்கள்.

ரத்தினக்குமரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. பல இடங்களில் விறுவிறுப்பாகத் திரைக்கதையை நகர்த்த ஸ்டடி கேமராபயன்படுத்தியிருப்பது சிறப்பு. சித்தார்த் விப்பினின் பின்னணி இசை திரைக்கதைக்கு மெருகூட்டுகிறது. தியாகராஜனின் படத்தொகுப்பு கச்சிதம். பணத்தின் தன்மையைப் பேசும் லலித்தானந்தனின் பாடல் வரிகள் கவனிக்கவைக்கின்றன.

ஒரு சில இடங்களில் அமெச்சூரான நடிப்பு, இயல்புக்குப் பொருந்தாத வசனங்கள் ஆகியவை படத்தின் உறுத்தல்கள். இவற்றில் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் போதை படம் குறிப்பிடத்தக்க படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கும்.

5.6

Average

Story - 7
Screenplay - 6
Direction - 5
Artist - 6
Music - 7
Cinematography - 6
Editing - 7
Stunt - 6
Dance - 6
Art - 6
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*