கம்பராமாயணத்தை ஒர் ஆண்டிலே ஆய்வு செய்தேன் – நடிகர் சிவகுமார்

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது.

விழாவில் நடிகர் சிவக்குமார் பேசியது.

சென்ற ஆண்டு சிவக்குமார் 75 என்ற நிகழ்ச்சி கொண்டாடும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஓவியக் கலையில் சேவை செய்த ஒருவரைத் தேர்வு செய்து மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். அந்த அடிப்படையிலே முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு மரியாதை செய்யப்படுகிறவர் அம்புலிமாமா பத்திரிகையிலே 55 ஆண்டுகள் வரைந்த ஷங்கர் ஐயா. அவருக்கு வயது 92. 60 ஆண்டுகளாக வரைந்து வருகிறார். தற்போதும் வரைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறார்.
அகரம் என்ற அற்புதமான அமைப்பை கட்டுக்கோப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற என் குழந்தைகள், தா.செ.ஞானவேல், ஜெயஸ்ரீ, ஆர்வலர்கள் மற்றும் இவர்களுக்கு எல்லாம் வழிக்காட்டியாக இருக்கின்ற கல்யாண் ஐயா உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு சந்திப்பிலுமே என்னைப் பற்றியே பேசுவதாக உங்களுக்கு சந்தேகம் வரலாம். நீங்கள் 100 மடங்கு பெரிதாக வரலாம் என்று தான் ஒவ்வொரு முறையும் என்னை உதாரணமாக சொல்கிறேன். எனக்கு முன்னேடியாக இருந்த சரித்திரம் படைத்த கலைஞர்கள் எல்லாம் 70 வயதில் காலமாகிவிட்டார்கள். அவர்கள் எல்லாம் உலகப்புகழ் பெற்றவர்கள்.
மகாபாரதம் படித்து பேச ஆரம்பித்த போது, எனக்கு 74 வயது முடிந்துவிட்டது. அந்த வயதில் அப்பா – அம்மா பெயரே சிலருக்கு மறந்து போகும். அவ்வாறு பேசுவதற்கு முன்பு சுமார் நான்கரை ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அந்நிகழ்வை நடத்தினேன். அதற்கு முன்பு கம்பராமாயணத்தை ஒர் ஆண்டிலே ஆய்வு செய்தேன். இதனை சாதனையாக நினைக்க வேண்டாம். உலகளவிலே கம்பராமாயணம் என்ற மாபெரும் காவியத்தை பற்றி முழுமையாக யாருமே பேசியதில்லை என்று சொல்கிறார்கள். 2 மணி 20 நிமிடத்திலே 100 பாடல் வழியாக பேசினேன். பேப்பரில் எழுதி வைக்காமல், ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் பேசியது யாருமில்லை என்றார்கள்.
கம்பராமாயணத்தை விட மகாபாரதம் என்பது 4 மடங்கு பெரிய காவியம். அதனை 4 வருடம் ஆராய்ச்சி செய்து, அதே 2 மணி 20 நிமிடத்தில் பேசி 10 ஆயிரம் டிவிடி போட்டு உலகம் முழுவதும் போய் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று பார்த்தால் உடம்பைப் பேண வேண்டும். முகம், கை, கால்கள் தான் உங்களது அடையாளம். இதை தவிர்த்து பார்த்தால் ஒன்றுமே இல்லை ஜீரோ தான்.
ஷங்கர் ஐயாவுக்கு 92 வயதாகிறது. அதற்கு காரணம் தன்னுடைய உடம்பை அந்தளவுக்கு பேணியுள்ளார். இதுவரை அவருடைய வாழ்க்கையில் காப்பியைத் தொட்டதே இல்லை என்றார். முதலில் உடம்பைப் பேணுவதை பழகிக் கொள்ள வேண்டும். மாதத்தில் கண்டிப்பாக 20 நாட்களாவது வாக்கிங் செல்வேன். 4 மணிக்கு காலையில் எழுந்திருப்பேன். 4:15 – 5 மணி வரை யோகா செய்வேன். 5:10 போட் கிளப் சென்று ஒரு மணி நேரம் வாக்கிங் செல்வேன். அதற்குப் பிறகு வீட்டுக்கு வந்து பேரக் குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு செல்லும் வேலையைச் செய்துவிட்டு, படிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். கடைசி மூச்சு வரைக்கும் நீங்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றால், உடம்பு ஆரோக்கியத்தை காக்க வேண்டும்.
இந்த உலகத்திற்கு பிறந்ததிற்கு அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் லட்சிய நோக்கம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், கல்வி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதனை கடைப்பிடித்தால் உங்களை யாராலும் தடுக்க முடியாது.
கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா – அம்மாவுக்கு படிப்பில்லை என்று வருத்தப்படலாம். அப்படி எந்த வருத்தமும் படத் தேவையில்லை. உங்களை எல்லாம் விட மிகவும் மோசமான சூழ்நிலையில் பிறந்தவன். பிறந்ததிலிருந்து எங்கப்பாவின் முகத்தைப் பார்த்ததே இல்லை. அப்பா என்று சினிமாவில் மட்டுமே வசனம் பேசியுள்ளேனே தவிர, அப்பா என்று யாரையும் அழைத்ததில்லை. 32 வயதிலே விதவையான அம்மா காட்டிலே பாடுபட்டு தான் என்னை படிக்க வைத்தார். எங்களது ஊரில் குடிக்கத் தண்ணீர் கிடையாது. சைக்கிளில் 3 கிமீ சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை தான் குளிக்க முடியும். அந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பளிக்க எல்லாம் முடியாது.
பெண்கள் டாய்லெட்டுக்கு செல்ல சூரியன் உதிக்கும் முன்னும், அஸ்தமனத்துக்குப் பின்னும் செல்லும் காலம் இன்னும் கிராமப்புறங்களிலே இருக்கிறது. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தான் எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படித்தேன். பள்ளிக்கூடத்துக்கு எங்களது ஊரிலிருந்து 1 கி.மீ செல்ல வேண்டும். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு குரூப் போட்டோ எடுக்க முடியவில்லை. அதனாலேயே அப்பள்ளிக்கூடத்துக்குப் போவதை தவிர்த்துவந்தேன். 50 ஆண்டுகள் கழித்து 2007-ம் ஆண்டு அப்பள்ளிக்கு சென்று, முன்னாள் மாணவர்கள் அதனை தத்தெடுத்துக் கொள்கிறோம் என்று கூறினோம்.
ஏழையாக பிறந்துவிட்டோம், கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா – அம்மா படிக்கவில்லை என்பது பாவம் கிடையாது. அது வரம். அதற்கு உதாரணம் நான். என்னை விட 100 மடங்கு பெரிய ஆட்களாக நீங்கள் வரலாம்.
பல்வேறு கஷ்டங்கள் கடந்து நடிகனானேன். 192 படங்கள் நடித்தேன். 40 வருடங்கள் நடித்தது போதும் என முடிவு செய்து, பேச ஆரம்பிக்கிறேன். இந்த சாதனை எல்லாம் ஒன்றுமே இல்லை. 100 சதவீதம் நீங்களும் இதைப் போன்று சாதிக்கலாம். சூர்யா – கார்த்தி இருவருமே இந்த அறக்கட்டளை நல்லபடியாக நடத்துவதற்காக தான் இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்துள்ளேன். உங்களுக்கு எல்லாம் கடவுளே கல்வியும், ஒழுக்கமும் தான். அதைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்.​

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*