⁠⁠⁠கதாபாத்திரத்தை உள் வாங்கி நடிக்கும் இயல்பு கொண்டவன் நான்: ⁠⁠⁠நடிகர் ராஜ்கிரண்.

⁠⁠⁠கதாபாத்திரத்தை உள் வாங்கி நடிக்கும் இயல்பு கொண்டவன் நான்: ⁠⁠⁠நடிகர் ராஜ்கிரண்.
⁠⁠⁠நடிகர் ராஜ்கிரணின் பவர்பாண்டி பேட்டி:
இந்த படத்தை முதன் முதலாய் தனுஷ் சார் வந்து உங்களிடம் சொல்லும்  போது என்ன நினைத்தீர்கள்?

முதலில் என்னிடம் வந்தது சுப்பிரமணிய சிவா. என்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தார். அவரை சந்தித்தேன், அப்போது அவர் ஒரு ஸ்டோரி லைன் சொல்கிறேன் உங்களுக்கு பிடித்திருந்தால் நாம் படம் பண்ணலாம் என்று கூறினார், நானும் சரி என்று சொன்னேன். ‘இப்போதுள்ள இளைய சமுதாயம் முதியோர்களை ரொம்ப உதாசினப்படுத்துகிறது. அவர்களுடைய உணவுர்களை மதிப்பதில்லை, அப்படி இருக்க கூடாது, உணர்வு என்பது அணைவருக்கும் ஒன்று தானே, இது தான் இந்த படத்தினுடைய ஸ்டோரி லைன் என்றார்.  நான் எப்போதுமே நல்ல விஷயம் இருந்தால் அந்த படத்தை ஒப்புக் கொள்வேன், இந்த விஷயம் எனுக்கு ரொம்ப பிடித்திருந்தது, ஏற்றுக் கொண்டேன். பின் அவர் தயாரிப்பாளரிடம் பேசி வருகிறேன் என்று சென்று விட்டார். மறுநாள் வந்தவர் என்னிடம், சார் உங்க மருமகன் தான் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார், தனுஷ் தான் இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார் என்றார். எனக்கு இதில் ரொம்ப மகிழ்ச்சி. தனுஷ் சார் நாளை உங்களை நேரில் சந்திப்பார். போனில் பேசுவது மரியாதையாக இருக்காது என்று கருதுகிறார் என்றார்.

மறு நாள் தனுஷ் நேரில் என்னை சந்தித்து கதை சொல்லவா என்று கேட்டார். நான் வேணாம் தம்பி நாம் படம் பண்ணலாம் என்று சொன்னேன். ஏனெனில் இன்று இறையருளால் தனுஷ் அவர்கள் தமிழ் திரையுலகில் மிகப் பெரிய உயரத்தை அடைந்துள்ளார். டோலிவுட், பாலிவுட் என்ற அனைத்திலும் சாதனைகளைப் படைத்து தற்போது ஹாலிவுட்டிற்கும் செல்ல இருக்கிறார். அப்பேற்பட்ட ஒருவர் தான் இயக்கும் முதல் படத்திற்கு ரஜினி சாரிடம் கால்சீட் கேட்டால் கூட கொடுத்திருப்பார் ஆனால் அவர் என்னை மனதில் வைத்து அனுகியது எனக்கு பெருமையாக உள்ளது, மேலும் படத்தின் கதை பிடித்து விட்டது அப்புறம் என்ன.?

என் ராசவின் மனசிலே படத்தில் கஸ்தூரி ராஜா உங்களை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் இன்று 27 வருடம் கழித்து அவர் மகன் உங்களை மீண்டும் அறிமுகம் செய்கிறார் இத்தனை வருடமாக திரையில் ஒரு ஹீரோவாக நிலைத்து நிற்கிறீர்கள் அப்பா, மகன் இருவருடன் பணியாற்றியதை பற்றி சொல்லுங்கள்:

இத்தனை வருடம் நிலைத்து நின்றது இறையருள், வேறு எதுவுமில்லை. 27வருடத்திற்கு முன் என் ராசவின் மனசிலே படத்தின் கருத்து என்ன.? குடிகாரனுக்கு குடும்பம் நடத்த தெரியாது எனவே குடிக்காதீங்க இதான அந்த படத்தின் கதை.  இப்போது இந்த கதையில் முதியோர்களின் உணர்வுகளை மதிக்கனும் எல்லா வயதினருக்கும் உணர்வுகள் ஒன்று தான். எடுத்துக்காட்டாக, இந்த முதியோர்களை ஒதுக்குவது கூட, நான் அடிப்படையாக கருதுவது 58 வயதான பிறகு அரசாங்கம் கொடுக்கும் வேலை ஓய்வு, இந்த வயதிற்கு மேல் அவரகளால் எதுவும் முடியாது என்ற நிலை பாமர சமூகத்தின் பார்வையில் உள்ளது.
இதில் இந்த சமுதாயத்தின் ஓர வஞ்சனை பாருங்க, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், கார்பரேட் நிறுவனங்கள் இவர்களுக்கு 60 வயதிற்கு மேல் தான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது.  நடுத்தர வர்க்கத்து மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தான் 60 வயதில் முடிகிறது.
இதற்கு தனுஷ் இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்றால், இளமை முதல் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களான மனைவி, பிள்ளைகள், அவர்களின் டீனேஜ் என்று எல்லாவற்றிற்கும் கஷ்டப்படும் போது நாம் நம் இளமையையும் செல்வத்தையும் இழக்கிறோம். எனவே நம் சுயத்தை இழக்காமல் இருக்க  நாம் நமக்கென்று ஒரு பகுதியை சேமித்து வைக்க வேண்டும். அப்படி கடைசி காலத்தில் நமக்கென்று ஒரு ஆதாரம் இருந்தால்  நாம் புறக்கணிக்கப்பட மாட்டோம்.  இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள், இன்றைய முதியவர்கள நேற்றைய இளைஞர்கள்.  27 வருடத்திற்கு என் ராசாவின் மனசிலே படத்தை ஒப்பிடும் போது தனுஷின் ப .பாண்டி படத்தில் போர போக்கில் நகைச்சுவையாக கருத்தை பதிவு செய்துள்ளார்.

இளம் வயதில், உங்கள் வயது மனிதரின் இடத்திலிருந்து உணர்வுகளை புரிந்து கொண்டு ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார் அது பற்றி உங்கள் கருத்து:

இந்த விஷயம், தனுஷ் மிகவும் பக்குவப்பட்டதன் வெளிப்படாக உள்ளது . மூத்த நடிகர்கள் உள்பட சிறு குழந்தைகள் வரை அனைவருடைய உணர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றார் போல் எங்களின் நடிப்பை வெளிக்கொணர்ந்தார்.

படத்தில் உங்களுக்கு சண்டைக்காட்சி உண்டா, ?
ஆம், இரண்டு காட்சிகள் உள்ளது. முதல் பாகத்தில் ஒன்று, இரண்டாம் பாகத்தில் ஒன்று.

டிரெய்லரில் ரேவதியுடனான காதல் காட்சிகள் பார்த்தோம், ஃப்ளாஷ் பேக்கிலும் அவர்தான் காதலியா ?

அது சஸ்பென்ஸ்.

இளைஞர் தலைமுறைக்கு இணையான சண்டைக்காட்சிகளில் எப்படி உங்களை பொருத்திக் கொள்கிறீர்கள் ?

அது, நான் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி கொள்வதால் சாத்தியமாகிறது. உதாரணத்திற்கு சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் நடித்த போது, என் மகனாக நடித்த இரண்டு சிறுவர்களை சைக்கிளில் வைத்து செல்வது போல் காட்சி. இந்த வயதில் அது சாத்தியமல்ல சாதரணமாக ஓட்டுவதே கடினம். ஆனால் நான் முதல் நாளில் எந்தவித பிரச்சனையும் இன்றி நடித்து விட்டேன். பின் மீண்டும் அதே பாதையில் இரண்டு நாட்கள் கழித்து ஒரு காட்சியில் நான் மட்டும் தனியாக ஓட்டுவது போன்ற காட்சி, அதில் நடிக்க கொஞ்சம் கடினமாயிருந்தது. கேரக்டருடன் ஒன்றியிருக்கும் போது அதன் வலிமையும் கிடைக்கிறது. அதனாலே தான் ஆக்சன் காட்சிகள் சாத்தியமடைகிறது.

இதுவரை நீங்கள் நடித்த படங்களில் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் அணைவரும் உங்களை ஒரு உட்சத்தில் வைத்து பார்க்கின்றனர். இப்போது இந்த பவர்பாண்டி உங்களை எந்த நிலைக்கு எடுத்து செல்லும்?

தவமாய் தவமிருந்திற்கு முன் என்னை பார்ப்பவர்கள் அணைவரும் ராஜ்கிரண் சார் என்று பார்ப்பார்கள். அந்த படத்திற்கு பிறகு எங்கு சென்றாலும் அனைவருமே மிக இயல்பாக அப்பா என்று பாசத்தோடு அழைத்தனர்.   இந்த பவர்பாண்டிக்கு பிறகு இது போன்ற தாத்தா நமக்கும் வேண்டும் என்ற உணர்வும், ஆசையும் வந்து விடும்.

இளையாராஜா போன்ற ஜாம்பவான்களுடன் பணிபுரிந்த நீங்கள் பவர்பாண்டியின் ஷான் ரோல்டனின் பணிகுறித்து என்ன நினைக்கிறீர்கள்.

ரொம்ப திருப்தி. அவரை சந்திக்கும் முன் தனுஷ் அவரை பற்றி என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார்.  ஷான் ரோல்டன் உலகத்தில் உள்ள அனைத்து இசைத்துறையின் ஜாம்பவான்களை பற்றியும் கரைத்து குடித்துள்ளார். இளையராஜா அவர்களை அப்படி ரசிக்கிறார்!. இருந்தும் அவரின் சில இசை குறிப்புகளை ஷானால் புரிந்து கொள்ள முடியவில்லை அவர் இதுவரை சினிமாவில் அவற்றை உபயோகித்ததும் இல்லை. சினிமாவுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே தந்திருக்கிறார் என்று ஷான் கூறுகிறார். என்று சொன்னார். அதை வைத்து நான் புரிந்து கொண்டேன் இளையாராஜாவை இவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கும் இவர் கண்டிப்பாக ஒரு நல்ல திறமைசாலி தான்.

இந்த படத்தில் முழுக்க முழுக்க இளைஞர்களுடன் பணியாற்றி இருக்கிறீர்கள் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

ஒட்டு மொத்த குழுவும் என் குடும்பமாக இருந்தது. குழுவினிடையே நல்ல ஒரு வைப்ரேஷன் இருந்தது, அதற்கு காரணம் இளைஞர்கள் நிறைந்த இந்த குழுதான். அனைவருமே திறமையை நீருபிக்க ஏகமனதாக செயல்பட்டதால் இது சாத்தியமானது.

படத்தை பற்றி ரசிகர்களுக்கு உங்களின் கருத்து என்ன?

ரசிகர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது எதுவுமில்லை, அவர்கள் தான் படம் பார்த்து விட்டு நமக்கு சொல்ல வேண்டும். ஒரு நல்ல பொருளை உற்பத்தி செய்தபின் வாங்குவது வாடிக்கையாளரின் விருப்பத்தில் தான் உள்ளது. யாரிடமும் வழுக்கட்டையமாக திணிக்க முடியாது.

பேட்டி நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*