மிரட்டலுக்கு தயாரான ‘அரண்மனை 2‘ ஹைலட்ஸ்

மிரட்டலுக்கு தயாரான ‘அரண்மனை 2‘ ஹைலட்ஸ்

கலக்கல் கதை இருக்கும், கலகலப்பான திரைக்கதை இருக்கும், சிரிக்க காமெடி இருக்கும், சீரியஸ் செண்டிமெண்ட் இருக்கும். இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் பிரதான அம்சமாக சேர்ந்துவிட்டது பேய். ‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து  மிரட்ட வரும் ‘அரண்மனை 2’வை பார்க்க பேய் மீது விழி வைத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
அதன் முன்னோட்டமாக படத்தின் இயக்குநர் சுந்தர்.சியையும் நடித்துள்ள நட்சத்திரங்களையும் ஒன்றிணைந்து பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிலிருந்து…
‘அரண்மனை’ இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது? சுந்தர்.சியிடம் கேட்டோம்.
“உண்மையிலேயே எந்த பிளானும் இல்லாமல்தான் இருந்தேன். ‘அரண்மனை’யில் பேய் படத்தின் மூடை ஆடியன்ஸ் கடைசி வரை ஃபீல் பண்ணவேண்டும் என்பதற்காக க்ளைமாக்ஸில் ஜன்னலில் பேய் வந்து நிற்பதுபோல் ஒரு சீன் வைத்திருப்பேன். அந்த சீனை பார்த்துட்டு செகண்ட் பார்ட் எப்ப எடுக்கப்போறீங்கன்னு எல்லோரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. வீட்டில் என் குழந்தைகளும் ‘எப்ப டாடி செகண்ட் பார்ட்?’ன்னு கேட்டாங்க. அப்போதான் செகண்ட் பார்ட் ஸ்கிரிப்ட்டுக்கும் பொறி தட்டியது. அதை டெவலப் பண்ண ‘அரண்மனை 2’ ஸ்டார்ட் ஆகிடுச்சு.”
மறுபடியும் ஹன்சிகாங்கறதிலும் முடிவா இருந்தீங்களா?
“கதை ரெடியானதும் முதல் போன் ஹன்சிகாவுக்குதாஅன் அடிச்சேன். விஷயத்தை கேட்டுட்டு இந்த படத்திலும் கண்டிப்பா நான் இருப்பேன்னு நான் கேட்கறதுக்கு முன்னாடியே முந்திகிட்டு கால்ஷீட் புக் பண்ணிட்டாங்க. பார்ட் ஒன்னைவிட இரண்டு செம சூப்பரா வந்திருக்கு. சொல்லமுடியாது ‘அரண்மனை 3’கூட வர வாய்ப்பிருக்கிறது”
சித்தார்த், த்ரிஷா கேரக்டர் எப்படி அமைஞ்சிருக்கு?
“ம் சூப்பர். சித்தார்த் இந்த படத்துக்குள் வந்ததே எதேச்சையாகதான் நடந்தது. ஒருநாள் பேசிட்டு இருந்தபோது செகண்ட் பார்ட் ஐடியாவை சொன்னேன். உடனே நான் பண்றேன் சார்னு ரெடியாகிட்டார். முன்னணி ஹீரோக்கள் நடிக்க தயங்கற அளவுக்கான ஒரு கேரக்டர்தான். ஆனா ரொம்ப ஈடுபாட்டுடன் நடிச்சு கொடுத்திருக்கார். அதேமாதிரி த்ரிஷா. ரெண்டு பேருக்குமே இது முதல் பேய் படம். செமையா என்ஜாய் பண்ணி நடிச்சிருக்காங்க. ஒரு காட்சியில் த்ரிஷா ஆன்னு கத்தனும். தொண்டை கட்டுற அளவுக்கு தொடர்ச்சியா இரண்டு மணி நேரம் கத்தி நடிச்சிருக்காங்க. செம கிளாமராவும் வர்றாங்க”
காமெடி எப்படி வந்திருக்கு?
“முதல்முறையா என் படத்தில் சூரி நடிச்சிருக்கார். டுபாக்கூர் சித்த மருத்துவர் கேரக்டர் அவருக்கு. சூரிக்காக 25 வருஷம் காத்திருக்கிற காதலியாக கோவை சரளா பின்னியிருக்காங்க. சரளாம்மா காமெடி பேய்னே சொல்லலாம். இவரோட அண்ணனா மனோபாலா நடிச்சிருக்கார்.’’
படத்தின் ஹைலட் என்று எதை சொல்வீர்கள்?
“ஒரு அம்மன் பாட்டு. இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதிக்கு மத்த பாட்டு குத்து பாட்டெல்லாம் வரும். ஆனா படத்தில் ஒரு அம்மன் பாட்டு வேணும்னு சொல்லும்போடு அவரால் அதை பண்ண முடியுமான்னு சந்தேகம் வந்தது. ஆனா பிரமாதமா ஒரு அம்மன் பாட்டு போட்டு கொடுத்தார். அந்தப் பாடலை ஷூட் பண்றது பெரிய சவாலாகவே இருந்தது. 150 அடி உயர அம்மன் சிலை முன்னாடி 350 டான்ஸர், ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடிச்சாங்க. ஒவ்வொரு ஷாட் எடுக்கும்போதும் நாலு பேருக்காவது நிஜமாகவே சாமி வந்திடும். ரொம்ப மிராக்கிளாக இருந்த அனுபவம் புதுசா இருந்தது. இந்தப் பாட்டு படத்தின் ஹைலட்டா இருக்கும்”
படம் பற்றி சித்தார்த்திடம் கேட்டபோது, “இந்தப்படத்தில் மூன்று வகையான பேய்கள் இருக்கு. சூரி, கோவை சரளா, மனோபாலா போன்ற காமெடி பேய்கள், ஹன்சிகா, த்ரிஷா, பூனம்பாஜ்வா என்கிற கவர்ச்சி பேய்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்னு டெக்னிஷன் பேய்கள் இருக்காங்க. நான் பேய் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை. ‘ஆயுத எழுத்து’ படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு நானும் த்ரிஷாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அந்தப்படத்தில் தாய்லாந்து கடற்கரையில் இருவரும் ஒரு பாட்டு சீனில் நடித்திருப்போம். சொல்லி வச்சது மாதிரி இந்தப்படத்திலும் அந்தக் கடற்கரையில் இருவருக்கும் ஒரு பாட்டு இருக்கு.” என்கிறார்.
ஹன்சிகா கூறுகையில், “சுந்தர்.சி சார் எப்ப படம் எடுத்தாலும் சரி கதை கேட்காமல் கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு அவர் டைரக்ஷன் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிகையில்தான் ‘அரண்மனை 2’ எடுக்கப்போறேன்னு அவர் சொன்னபோது ‘இது என்னோட படம் நான் இல்லாமல் ஷூட்டிங் போகக்கூடாதுன்னு உரிமையாக சொன்னேன். இதில் எனக்கு ‘மாயா..’ங்கற பாட்டு இருக்கு. வெரி நைஸ் சாங். சுந்தர் சாருடன் இது எனக்கு 4-வது படம். இதுவும் சூப்பர் ஹிட் ஆகும்”
“சுந்தர்.சி படம்னாலே ஆடியன்ஸுக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். எனக்கும் இந்தப்படம் ஸ்பெஷல்தான். இந்தப்படத்தில் நடிச்சது எனக்கு புது அனுபவம். இதில் சில காட்சிகளில் செக்ஸியா வருவேன். செக்ஸி என்பதைவிட பியூட்டிஃபுல்லா காட்டிருக்காங்க என்றுதான் சொல்லணும்.”என வெட்க புன்னகை வீசுகிறார் த்ரிஷா.
சூரியிடம் கேட்டபோது, “காமெடியன்கள் எல்லோருக்குமே சுந்தர்.சி அண்ணன் படத்தில் நடிக்கணும்கிற ஆசை இருக்கு. எனக்குள் இருந்த அந்த ஆசை ‘அரண்ம்மனை 2’ மூலமாக நிறைவேறியிருக்கு. நிஜத்தில் என்னோட அக்காவாக நினைத்து மதிக்கும் கோவை சரளா என்னோட காதலியா நடிச்சிருக்காங்க. படத்தில் 25 வருஷம் கழித்து அவங்களை சந்திக்கும் போது  ‘வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் உங்களை விட்டு போகலைன்னு என்னை பார்த்து அவங்க விடும் லுக்கில் ஆடியன்ஸிடமிருந்து அப்ளாஸ் அள்ளும்.”என்கிறார்.
படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு கூறுகையில், “ ‘அரண்மனை’யைவிட ‘அரண்மனை 2’ பிரமாண்டமா இருக்கணும்கிற முடிவோடதான் இந்த படத்தை தயாரித்திருக்கோம். புரொடியூஷர் டைரக்டராக இருபது வருஷத்துக்கும் மேலாக சுந்தர்.சி சார் இருப்பது, அவரோட மனைவியா நான் பெருமைப்படும் விஷயம். இந்தப்படத்தில் வரும் அம்மன் பாட்டை கேட்டுவிட்டு எனக்கு சிலிர்த்துவிட்டது. அந்த சிலிர்ப்பை அத்தனை ரசிகர்களும் அனுபவிக்கப்போவது நிச்சயம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*